லலித் அத்துலத்முதலி மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம், வசதி குறைந்த இளைஞர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதன் மூலம் நிதி உதவியை வழங்குவதையும் வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக உயர் கல்வியைப் பெறுவதற்கு சம சந்தர்ப்பத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க சட்டத்தின் கீழ் "லலித் அத்துலத்முதலி மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம்" ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் 3ஆம் பிரிவின் பிரகாரம் ஒரு நம்பிக்கை பொறுப்பு சபையினால் நிதியத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளையில் நம்பிக்கை பொறுப்பு சபையின் தலைவராக பிரதம நீதியரசர் செயலாற்றுகிறார். நம்பிக்கை பொறுப்பு சபையை ஆறு அங்கத்தினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அதில் தலைவர், ஸ்தாபக நம்பிக்கை பொறுப்பாளர் என்ற வகையில் பதவிவழியில் உயர் கல்வி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் உயர் கல்வி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படுகின்ற ஏனைய இரண்டு நம்பிக்கைபொறுப்பாளர்கள் ஆகிய ஆறு உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

லலித் அத்துலத்முதலி அவர்கள் 1980ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் கப்பல் அலுவல்கள் அமைச்சராக இருந்தபோது "மஹபொல" என்ற எண்ணக்கருவை ஸ்தாபித்தார். மஹபொல புலமைப்பரிசில் 1981ஆம் ஆண்டு முதலில் 422 புலமைப்பரிசில்களாக வழங்கப்பட்டது. அத்துடன், க.பொ.த (உ/த) பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு திறமை அடிப்படையில் விண்ணப்பிக்கின்ற மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்குவது வரையறுக்கப்பட்டது. பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப வருமானத்தைக் கவனத்திற்கொண்டு இப்பரிசு வழங்கப்பட்டது. வருடாந்த மஹபொல புலமைப்பரிசில்களுக்கிடையில், 10% திறமை அடிப்படையிலும் 90% பொது புலமைப்பரிசிலுக்கும் ஒதுக்கப்பட்டது. பொதுவான புலமைப்பரிசிலுக்கு ரூ. 5000/- வழங்கப்பட்டதுடன் திறமை அடிப்படையிலான புலமைப்பரிசிலுக்கு ரூ. 5,050/- வழங்கப்பட்டது. செலவின் 50%ஐ அரசாங்கம் வழங்கியது.

நோக்கு

வறுமை ஒழிப்பை குறிக்கோளாகக் கொண்டு புலமைப்பரிசில் சமுதாயமொன்றை உருவாக்குதல்

செயற்பணி

சிறப்புரிமையற்ற இளைஞர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக உயர் கல்வியைப் பெறுவதற்கு சம சந்தர்ப்பங்களை உருவாக்குதல்.

குறிக்கோளும் நோக்கமும்

இரண்டாம் நிலை கல்வியையும் உயர் கல்வியையும் தொடர்வதற்கு நிதி உதவி தேவைப்படுகின்ற தகுதியான வாலிப வயதினரின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு காலஞ்சென்ற கௌரவ. லலித் அத்துலத்முதலி அவர்கள் "மஹபொல" எண்ணக்கருவை ஸ்தாபித்தார்.

  • இளைஞர்களுக்கு உயர் கல்விக்கான வசதிகளை வழங்குதல்
  • இரண்டாம் நிலைக் கல்வியை திருப்திகரமாக நிறைவுசெய்த இளைஞர்களுக்கு, பல்கலைக்கழகத்தில் அல்லது தொழில்நுட்ப அல்லது உயர் கல்வி நிறுவகத்தில் கல்வி, கைத்தொழில் அல்லது தொழில்நுட்ப கல்வி என்பவற்றைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் உதவி வழங்குதல். அது பின்வருமாறு அமைகிறது,
  • இளைஞர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் திறன்களையும் திறமைகளையும் விருத்திசெய்துகொள்ளுவதற்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிறுவகங்களை நிறுவி அவற்றை முகாமைப்படுத்தி உதவி விழங்குதல்,
  • மேலதிக கல்வியைத் தொடர்வதற்கு பாடசாலைகள், கல்வி நிறுவகங்கள், மன்றங்கள் மற்றும் அதையொத்த நிறுவகங்களை நிறுவி முகாமைப்படுத்துவதன்மூலம் மாணவர்களுக்கு உதவுதல்,
  • மேலதிக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரின் ஆற்றல்களையும் திறமைகளையும் மேம்படுத்துவதற்கும் விருத்திசெய்வதற்கும் உதவிகளை வழங்குதல்.